பொதுவேலை நிறுத்தம்: மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
திருச்சியில் பொதுவேலை நிறுத்தம் காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.
திருச்சி,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையிலான வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்க அறைகூவலை ஏற்று மத்திய, மாநில அரசு ஊழியர்களும் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, திருச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பு திருச்சி கோட்ட அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்-2 கோட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். பி3 கோட்ட செயலாளர் மருதநாயகம், பி4 கோட்ட செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
தபால் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் அங்குள்ள பார்சல் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி இருக்கைகள் காலியாகி வெறிச்சோடி கிடந்தன. 130 ஊழியர்கள் பணியாற்றிய அந்த பிரிவில் 28 ஊழியர்கள் மட்டுமே நேற்று பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல திருச்சி பாரதிதாசன் சாலை, பாரதியார் சாலை ஆகிய இடங்களில் உள்ள எல்.ஐ.சி. அலுவலங்களிலும் பெரும்பால ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. பாரதியார் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியில் வங்கிகள் திறந்திருந்தாலும் குறைந்த அளவிலான ஊழியர்களே பணியில் ஈடுபட்டனர். உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், பி.மேட்டூர் பகுதியிலுள்ள வங்கிகள், அஞ்சல் நிலைய அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
துப்பாக்கி தொழிற்சாலை
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை முன் தொழிற்சங்க கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையிலும், எச்.ஏ.பி.பி. தொழிற்சாலையில் போராட்டக்கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையிலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அரை மணி நேரம் கால, தாமதமாக பணிக்கு சென்றனர். மேலும் பெல் நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான தொழிலாளர்கள் பணிக்கு சென்று விட்டனர்.
இதுபோல் மின்வாரியத்தை தனியார் மயமாக்க வேண்டாம் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி வருமான வரி அலுவலகம் வருமான வரி அலுவலர் சம்மேளனத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுபோல் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் (சி.ஐ.டி.யு.சி.) சார்பில் ஆட்டோக்களை இயக்காமல் நேற்றைய தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story