திருவாரூர் மாவட்ட பகுதிகளில் தொடர் மழை: வயல்களில் தண்ணீர் தேக்கம்; 9 வீடுகள் சேதம்
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. 9 வீடுகள் சேதம் அடைந்தன.
கொரடாச்சேரி,
நிவர் புயலால் திருவாரூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைத்தனர். மரங்களில் இருந்த கூடுதல் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.
அரசின் சார்பில் புயல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயலின் தாக்கமாக கொரடாச்சேரி பகுதியில் தொடர்ந்து பல மணிநேரம் மழை பெய்தது.
வளர்ச்சி திறன் பாதிக்க வாய்ப்பு
இந்த மழை கனமழையாக இல்லாமல் சாரல் மழையாகவே இருந்தது. கனமழை பெய்யாததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். தொடர் மழை காரணமாக எந்திரங்களை கொண்டு நடவு செய்யப்பட்ட இளம் நாற்றுகள் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் அரசவனங்காடு, திருமதிகுன்னம், அம்மையப்பன், கொடிமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் ஓரிரு இடங்களில் 50 ஏக்கர் பரப்பில் இவ்வாறு வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீர் ஒருசில நாட்களில் வடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையால் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பயிரின் வளர்ச்சி திறன் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பில் இருந்து பயிர்களை மீட்க தேவையான உரம் தெளிக்க வேண்டும். எனவே இந்த பகுதிகளில் தேவைப்படும் உரம் கூட்டுறவு சங்கங்களில் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புயலின் தாக்கம் காரணமாக பெய்த தொடர் மழையால் கோட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் கரையை கடந்த பிறகு கோட்டூர் பகுதியில் மழை இல்லை.
முன்னதாக தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், ஆற்றங்கரையோரம் வசித்தவர்கள் புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக கோட்டூர் பகுதியில் 101 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
வீடுகள் சேதம்
தொடர் மழை காரணமாக கோட்டூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மண் சுவர் கொண்ட கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
கோட்டூர் அருகே மழவராயநல்லூரில் 2 வீடுகள், திருவெண்டுதுறை கிராமத்தில் 3 வீடுகள், கருப்பட்டிமூலை கிராமத்தில் 3 வீடுகள், பள்ளிவர்த்தி கிராமத்தில் 1 வீடு என மொத்தம் 9 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story