நிவர் புயல் எதிரொலி: மாவட்டத்தில் சாரல் மழை ஏற்காட்டில் கடும் குளிர் நிலவியது
சேலம் மாவட்டத்தில் நிவர் புயல் எதிரொலியாக பரவலாக சாரல் மழை பெய்தது. ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் நிலவியது.
சேலம்,
வங்க கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையானது விடிய, விடிய பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக சேலத்தில் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள புது ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. தற்போது இந்த ஏரி தண்ணீர் ததும்பி காட்சி அளிக்கிறது.
அதே வேளையில் சேலம் மாநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று காலையில், உழவர் சந்தைகளுக்கும், மளிகை கடைகளுக்கும் சென்றவர்கள் குடைகளை பிடித்தபடி சென்று வந்தனர். சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகக்குறைந்த அளவிலேயே சென்று வந்தனர்.
சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம், கலெக்டர் அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், குரங்குச்சாவடி, அழகாபுரம், 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வியாபாரம் பாதிப்பு
சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையை விட பஸ்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. பஸ்சில் 10 முதல் 15 பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்ததை காண முடிந்தது. அதேநேரத்தில் மழை காரணமாக காலையில் அலுவலக பணிகளுக்கு சென்ற ஊழியர்களும், அரசு மருத்துவமனைக்கு சென்ற பணியாளர்களும் குடைகளை பிடித்தபடி வந்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் மழை காரணமாக அவதிக்குள்ளாகினர்.
நிவர் புயல் காரணமாக சேலம் சின்னக்கடை வீதியில் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக காய்கறி மற்றும் பூக்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டது. புயல் காரணமாக ஊட்டி, கொடைக்கானலில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு வரக்கூடிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி ஆகிய காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி, வாழைப்பூ உள்ளிட்டவையும் வரவில்லை. சேலம் முதல் அக்ரஹாரம், ஆற்றோரம் காய்கறி கடை, மற்றும் மாநகராட்சி வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து காணப்பட்டது.
ஏற்காட்டில் கடும் குளிர்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று மாலை 4 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. மழையுடன் கடும் குளிர் நிலவியதால் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர். ஒரு சில கிராமங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் நேற்று மாலைக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஏற்காடு மலைச்சாலையில் பனி மூட்டம் காரணமாக வாகனங் களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி ஓட்டிச் சென்றனர்.
நெல் பயிர்கள் சேதம்
சேலம் கன்னங்குறிச்சி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இரவில் பலத்த காற்றும் வீசியது. இதனால் கன்னங்குறிச்சி அருகில் உள்ள புது ஏரி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்து சேதம் அடைந்தன.
நிவாரணம்
சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெல் பயிர்கள் அனைத்தும் புயல் காற்று மழைக்கு சரிந்து சேதமானது. நேற்று காலை வயல்களுக்கு சென்ற விவசாயிகள் சாய்ந்து சேதம் அடைந்துள்ள நெல் பயிர்களை கண்டு வேதனை அடைந்தனர். சேதம் அடைந்த நெல் பயிர்களுக்கு அரசு இழப்பீட்டு தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையளவு
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரையிலும் பரவலாக பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தம்மம்பட்டி-27, காடையாம்பட்டி-9, கெங்கவல்லி-24, வீரகனூர்-37, கரியகோவில்-33, ஆணைமடுவு-17, ஏற்காடு-34, வாழப்பாடி-5.7, மேட்டூர்-12, ஓமலூர்-3, சங்ககிரி-10.2, எடப்பாடி-11, ஆத்தூர்- 28.8, பெத்தநாயக்கன்பாளையம்- 32, சேலம்-1.8.
Related Tags :
Next Story