மதுரை அருகே குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்க லஞ்சம்; பெண் இன்ஸ்பெக்டர் கைது
மதுரை அருகே குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்குவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செக்கானூரணி,
திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நல்லதம்பி (வயது 60) என்பவருக்கும் இடையே முன் விரோதம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் முத்துவுக்கும், அவரது மனைவிக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் முத்து செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் கடந்த 30.9.2017 அன்று நல்லதம்பி உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லதம்பியை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்பே இல்லாத தனது மகன்கள் மாரி, கண்ணன், பேரன் கமல் ஆகியோரது பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்குமாறு நல்லதம்பி இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர்களது பெயரை நீக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் அனிதா கேட்டார். அதற்கு நல்லதம்பி ரூ.80 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டார். மேலும் முதற்கட்டமாக ரூ.30 ஆயிரம் தருவதாகவும் கூறினார்.
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்
இதனைத் தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத நல்லதம்பி இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை நல்லதம்பியிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார் சென்று இன்ஸ்பெக்டர் அனிதாவை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். நேற்று நள்ளிரவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.
குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்குவதற்கு லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story