பொது வேலை நிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட 3,000 பேர் கைது


பொது வேலை நிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட 3,000 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2020 8:51 PM IST (Updated: 27 Nov 2020 8:51 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த பொது வேலை நிறுத்தத்தின் போது 19 சதவீத அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 39 இடங்களில் நடந்த மறியலில் ஈடுபட்ட 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர், 

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த கோரியும் நேற்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தமிழக அரசு இந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தியதோடு பங்கேற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 161 அரசு ஊழியர்களில் 2,119 பேர் மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதில் 2,500-க்கும் மேற்பட்டோர் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆவர்.

மறியல் போராட்டம்

இதனால் அரசு அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மொத்தம் உள்ள 1,500 வங்கி ஊழியர்களில் 50 பேர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். 200 எல்.ஐ.சி. ஊழியர்களில் 40 பேரும், 110 பி.எஸ்.என்.எல். ஊழியர்களில் 20 பேரும், 220 தபால் ஊழியர்களில் 30 பேரும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள 140 அலுவலகங்களில் யாரும் கலந்து கொள்ளவில்லை. மறியல் மாவட்டத்தில் 39 இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

3,000 பேர் கைது

விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகி வேலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பாலமுருகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில குழு உறுப்பினர் முருகேசன் உள்பட 58 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று ஆர்.ஆர். நகரில் 17 பேரும், எம்.ரெட்டியபட்டியில் 198 பேரும், நரிக்குடியில் 100 பேரும், திருச்சுழியில் 80 பேரும் ஆக மொத்தம் 39 இடங்களில் மறியல் செய்த 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 48 பெண்கள் உள்பட 145 பேர் கலந்து கொண்டனர்.

பாதிப்பில்லை

மாவட்டம் முழுவதும் நேற்று பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் வழக்கம் போல் இயக்கின.

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும் நகராட்சி நிர்வாகம் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு துப்புரவு பணியை மேற்கொண்டது.

மாவட்டத்தில் சில இடங்களில் கூட்டுறவு சங்கங்கள், கிராம வங்கி கிளைகள், தபால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. மொத்தத்தில் இந்த பொது வேலை நிறுத்தத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

சிவகாசி

வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகாசி சாட்சியாபுரத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் விருதுநகர் மாவட்ட தலைவர் சந்திரராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருசாமி விளக்க உரையாற்றினார். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட செயலாளர் வைரமுத்து, தமிழக முன்னேற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சண்முகம், போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் மோகன்ராஜ், எல்.ஐ.சி. ஒய்வூதியர்சங்கம் சார்பில் ராஜேந்திரன் உள்பட 66 பேர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அய்யாசாமி நன்றி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

சேத்தூரில் முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, விவசாய சங்க பிரதிநிதி அய்யனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி தங்கவேல் உள்பட 189 பேர் கலந்து கொண்டனர். செட்டியார்பட்டி அரசரடி பஸ் ஸ்டாப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், ம.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் முன்பாக மரிய டேவிட் மற்றும் கணேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், சி.பி.ஐ. சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகர்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதேபோல தேரடியில் நடைபெற்ற போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் பங்கேற்றனர். மல்லி, வைத்திலிங்காபுரம் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

Next Story