சிறுமியை கிண்டல் செய்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கிண்டல் செய்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Nov 2020 5:17 AM IST (Updated: 29 Nov 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே சிறுமியை கிண்டல் செய்த 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சங்கர்(வயது 19), பிரதீப்ராஜ்(19), கருப்பையா(20). இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி அன்று சந்தைக்கு காய்கறி வாங்க வந்த 13 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்று கிண்டல் செய்து, அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி, இது பற்றி தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர், மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மங்களமேடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

தலா 3 ஆண்டு சிறை

இந்த வழக்கு, பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிரி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமியை கிண்டல் செய்த சங்கர், பிரதீப்ராஜ், கருப்பையா ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகை செலுத்த தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டார்.

Next Story