கரூர் மாவட்டத்தில் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி + "||" + Heavy rains in Karur district: Public suffering due to water intrusion into houses
கரூர் மாவட்டத்தில் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, மரவாப்பாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், புன்னம்சத்திரம், நல்லிகோவில், ஒரம்புப்பாளையம், ஓலப்பாளையம், தளவாபாளையம், பாலத்துறை, தவுட்டுப்பாளையம், புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் ஈரோடு- கரூர் நெடுஞ்சாலை ஆசாரி பட்டறை பகுதியில் இருந்து வடுகப்பட்டி, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம் வழியாக புங்கோடையில் உள்ள புகளூர் வாய்க்காலில் உபரி நீர், மழைநீர் சென்று கலக்கும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாயில் பல்வேறு விதமான செடி, கொடிகளும், அதேபோல் விவசாயிகள் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்லும் வகையில் சிறிய பாலங்களும் அமைத்து இருந்ததால் அந்த வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்தது. அதன் காரணமாக குளத்துப்பாளையத்தில் உள்ள காலனிகளில் குடியிருப்பவர்கள் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
சமுதாய கூடத்தில் தங்க வைப்பு
அதேபோல் வேட்டமங்கலம் பழைய காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. தொடர் கனமழையால் வேட்டமங்கலம் பழைய காலனி மற்றும் புதுப்பாளையத்தில் உள்ள காலனி பகுதிகளை சேர்ந்த சுமார் 56-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களை குளத்துப்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் நேரில் ஆறுதல்
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பூபதி கொடுத்த தகவலின் பேரில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் கரூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், உதவி கலெக்டர் ஹர்ஸத்பேகம், மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், தாசில்தார் வேலுசாமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு அவர்கள் தங்கியுள்ள சமுதாய கூடத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்கள். பின்னர் ஊர்களுக்குள் தேங்கிய தண்ணீர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
அதேபோல் கழிவுநீர் கால்வாயின் குறுக்கே விவசாயிகள் சிலர் தரைப்பாலம் அமைத்திருந்தனர். அதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன் அடிப்படையில் இருபாலங்களையும் அகற்றி தண்ணீர் விரைவாக வடிய வழிவகை செய்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், கூலக்கவுண்டனூர், பாலத்துறை, மூலிமங்கலம், காகிதபுரம், செம்மடை, செம்பாடம்பாளையம், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, மூர்த்திபாளையம், அய்யம்பாளையம், தளவாப்பாளையம், மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் விடியற்காலை வரை சாரல்மழையாக இருந்து வந்தது.
குளித்தலை உழவர் சந்தையில் தேங்கிய மழைநீர்
குளித்தலை பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகள், தெருக்கள், போலீஸ் நிலையம் அரசு அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிநின்றது. அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் பல்வேறு தேவைகளுக்காக கடைகளுக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. தரை கடைகள் வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளில் பெரும்பாலானோர் கடைகள் வைக்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே மழையில் நனைந்தபடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர். சில மணி நேரங்கள் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் குளித்தலை உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் குளித்தலை உழவர் சந்தைக்குள் புகுந்தது. இதனால் அசுத்தமான நீரில் நடந்து சென்றே பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச்சென்றனர். சந்தைக்குள் தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தால் சந்தைக்குள் தரை கடைகள் வைத்திருந்தவர்கள் கடை வைக்க முடியாத சூழ்நிலை நேற்று ஏற்பட்டது. மழை ஓய்ந்த பின்னர் உழவர் சந்தையில் தேங்கியிருந்த மழை நீர் வடியத்தொடங்கியது.
ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கருவிகளுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.