மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம்- மடிக்கணினி கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம்- மடிக்கணினி கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Nov 2020 3:02 AM GMT (Updated: 29 Nov 2020 3:02 AM GMT)

திருப்பனந்தாள் அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் மடிக்கணினியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சோழபுரம் கடைவீதியில் மருந்து கடை உள்ளது. இங்கு விற்பனை மேலாளராக அன்சாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்து இரவு வியாபாரம் ஆனதன் மூலம் கிடைத்த பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக மருந்து கடையில் உள்ள கல்லாப்பெட்டியில் வைத்து, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அன்சாரியிடம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் திருப்பனந்தாள் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

ரூ.1½ லட்சம் கொள்ளை

அதன்பேரில் போலீசார் கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதேபோல் மர்ம நபர்கள் அருகில் உள்ள துணிக்கடையிலும் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். அதே பகுதியில் உள்ள சில மளிகை கடைகளிலும் பூட்டை உடைக்க மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாமல் போனதால் மளிகை கடைகளில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.

வலைவீச்சு

திருப்பனந்தாள் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்த காட்சி பதிவாகி இருப்பதை அறிந்தனர். இதையடுத்து கொள்ளை நடந்த மருந்து கடை, துணிக்கடை மற்றும் கொள்ளை முயற்சி நடந்த மளிகைக்கடையில் தடயவியல் நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மருந்துக்கடை, துணிக்கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், மளிகை கடைகளில் பூட்டை உடைக்க முயன்றிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story