மாவட்டத்தில் பரவலாக மழை: கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மாவட்டத்தில் பரவலாக மழை: கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2020 4:08 AM GMT (Updated: 29 Nov 2020 4:08 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

நிவர் புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வருகிறது. இந்த அணைக்கு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 682 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

கே.ஆர்.பி. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.10 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மதகுகளில் இருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பொழிவு அதிகரித்தால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்க்கப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். கே.ஆர்.பி. அணையில் இருந்து கால்வாய் மற்றும் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story