ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் ரூ.2½ லட்சம் மோசடி


ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் ரூ.2½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 29 Nov 2020 10:28 AM IST (Updated: 29 Nov 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

ஏற்காடு ஒன்றியத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் 1,713 தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிலையில் ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ஏற்காடு டவுன் பகுதியில் 43 தனிநபர் கழிப்பிடங்கள் கட்டாமலேயே கட்டியதாக பில் தயாரித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மோசடி நடந்தது தெரியவந்தது.

5 பேர் மீது வழக்கு

இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அப்போது வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுஜிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) செந்தில்குமார், பணி மேற்பார்வையாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் இளவரசன், ஒப்பந்ததாரர் சதாசிவம் ஆகிய 5 பேர் மீது மோசடி, கூட்டு சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சுஜிதா எடப்பாடி ஒன்றியத்திலும், செந்தில்குமார் காடையாம்பட்டி ஒன்றியத்திலும், சரவணன் ஓமலூர் ஒன்றியத்திலும், இளவரசன் மேச்சேரி ஒன்றியத்திலும் பணியாற்றி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Next Story