கொடைரோடு அருகே ஆட்டோக்கள் மீது வேன்-கார் மோதல்; 2 பெண்கள் பலி 11 பேர் படுகாயம்


கொடைரோடு அருகே ஆட்டோக்கள் மீது வேன்-கார் மோதல்; 2 பெண்கள் பலி 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Nov 2020 6:17 AM GMT (Updated: 29 Nov 2020 6:17 AM GMT)

கொடைரோடு அருகே ஆட்டோக்கள் மீது வேன், கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். ஆட்டோ டிரைவர் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொடைரோடு,

கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவு சிறுமலை அடிவாரத்தில், தேசிய ஊரக உறுதித்திட்டத்தின்கீழ் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஜம்புதுரைகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சக்கையநாயக்கனூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை அவர்கள் வழக்கம்போல் ஓடையை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வேலை முடிந்து மாலையில் 2 ஆட்டோக்களில் தலா 10 பேர் வீதம் ஏறி ஜம்புதுரைகோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவு திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் அந்த ஆட்டோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன.

வேன்-கார் மோதல்

அப்போது, பின்னால் அசுர வேகத்தில் வந்த மினிவேன் ஒன்று அந்த 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அந்த மினிவேன் தறிகெட்டு ஓடி சாலையோரத்தில் நின்றது. ஒருசில வினாடிகளில் நடந்த இந்த விபத்தில் 2 ஆட்டோக்களும் கவிழ்ந்தன. இதில் ஆட்டோக்களில் வந்த பெண் பணியாளர்கள் அபயகுரல் எழுப்பினர்.

இதற்கிடையே பின்னால் வந்த கார் ஒன்றும், 2 ஆட்டோக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த ஆட்டோக்கள் சில அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டன. இந்த விபத்தில் சக்கையநாயக்கனூரை சேர்ந்த முருகன் மனைவி சுப்புலட்சுமி (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் அதே ஊரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (30), சந்திராமேரி (53), சுமதி (35), மரிய ஆரோக்கியம் (42), தமிழரசி (59) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

பெண் பலி

விபத்து குறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லையா மனைவி சரசுவதி (55) என்பவரும் இறந்தார். மீதமுள்ள 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆட்டோக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story