சட்டசபை தேர்தலை முன்னிட்டு எடப்பாடி தொகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தை தொடங்கினார் - நிவர் புயலை எதிர்கொள்ள அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு


சட்டசபை தேர்தலை முன்னிட்டு எடப்பாடி தொகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தை தொடங்கினார் - நிவர் புயலை எதிர்கொள்ள அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Nov 2020 4:00 AM IST (Updated: 29 Nov 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நேற்று எடப்பாடி தொகுதியில் தொடங்கினார். அப்போது அவர், நிவர் புயலை எதிர்கொள்ள எந்தவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எடப்பாடி, 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தற்போதே பிரசார வியூகம் வகுக்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்தை தொடங்கிய நிலையில், அந்த கட்சியின் அடுத்த கட்ட பிரசார திட்டத்தின்படி, மகளிர் அணி செயலாளரும், கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசார பயணத்தை நேற்று தொடங்கி உள்ளார்.

அவர், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்‘ என்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நேற்று காலை 11 மணியளவில் தொடங்கினார். பிரசாரத்தின் தொடக்கமாக கொங்கணாபுரம் என்.பி.டி. மகாலில், மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெறவேண்டும் என்பதற்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்போது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீட்டெடுக்கப்பட்டு உச்சத்தை தொடும்.

ஜெயலலிதா பெயரை சொல்லி நடத்தப்படும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு தானும் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வரவேற்கிறார். மேலும் தமிழகத்தில் எந்தவிதமான தொழில் வளர்ச்சியும் இல்லை. அதேபோல் ஒரு வேலைவாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை. இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. பிரசார பயணத்தின் போது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி விட்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளதை காண முடிகிறது. பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டு வந்துள்ளதாக கூறி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் பலமுறை கேட்டும் இதுவரை என்ன முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்?

நிவர் புயலின் தாக்கம் குறைவாக இருந்த காரணத்தினாலேயே பாதிப்பும் குறைவாக இருந்தது. ஏற்கனவே தமிழக அரசு பாடம் கற்றுக்கொண்டும், புயலை எதிர்கொள்ள எந்தவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தற்போது காண முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story