கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் குளிக்கும்போது மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் குளிக்கும்போது மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். கூலித்தொழிலாளி. இவரது மகன் ராஜாமணி (வயது 18). கடந்த 27-ந்தேதி காலை பெருவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தரைப்பாலத்தின் வழியாக செல்லும் போது ஆரணி ஆற்றில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து குளித்து கொண்டிருந்தார்.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அந்த வெள்ளத்தில் ராஜாமணி அடித்து செல்லப்பட்டார். மாயமான வாலிபர் ராஜாமணியை தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் நேற்று 3- வது நாளாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் முள்புதரில் வாலிபரின் உடல் சிக்கி ஒதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. ராஜாமணியின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story