கிண்டியில் வாடகை கார்களை விற்க முயன்ற மோசடி வாலிபர் கைது - ரூ.60 லட்சம் மோசடி வழக்கில் சிறை சென்றது விசாரணையில் அம்பலம்
கிண்டியில் 3 கார்களை வாடகைக்கு எடுத்து விற்க முயன்ற மோசடி வாலிபர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே ரூ.60 லட்சம் மோசடி வழக்கில் சிறை சென்றவர் என்பது விசாரணையில் அம்பலமானது.
ஆலந்தூர்,
சென்னை கோட்டூர்புரம் திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ்சிங் (வயது 26). இவர் தனக்கு சொந்தமான 2 கார்களையும் கிண்டி லேபர் காலனியை சேர்ந்த அருண்குமார் (32) என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார். இதற்காக மாதம் தலா ரூ.28 ஆயிரம் என 2 மாதம் வாடகை பெற்றுள்ளார்.
2 மாதம் கழித்து தனது நண்பரான கார்த்திக் என்பவரின் காரையும் அருண்குமாரிடம் வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக 3 கார்களுக்கும் எந்தவித வாடகையும் தராமல் அருண்குமார் இழுத்தடித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆகாஷ்சிங், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் அருண்குமார் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அப்போது அவர் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி கிண்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது அருண்குமார் பல்லாவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், 3 வாடகை கார்களில் 1 கார் விபத்துக்குள்ளாகி இருப்பதும், 2 கார்களையும் திருட்டுத்தனமாக மோசடி செய்து விற்பதற்காக அருண்குமார் ஏற்பாடு செய்து இருந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கார் ஷோரூமில் விற்பனையாளராக வேலை செய்த அவர், வாடிக்கையாளர்களின் ரூ.60 லட்சத்தை மோசடி செய்ததாக நந்தம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story