எழும்பூரில் சம்பவம்: நடுரோட்டில் மொபட்டில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு - நடக்க முடியாத முதியவர் சாலையில் குதித்து உயிர் பிழைத்தார்


எழும்பூரில் சம்பவம்: நடுரோட்டில் மொபட்டில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு - நடக்க முடியாத முதியவர் சாலையில் குதித்து உயிர் பிழைத்தார்
x
தினத்தந்தி 29 Nov 2020 11:00 PM GMT (Updated: 29 Nov 2020 9:15 PM GMT)

காந்தி இர்வின் சாலையில் முதியவர் ஒருவர் ஓட்டிச்சென்ற மொபட்டில் தீப்பிடித்தது. நடக்க முடியாத முதியவர் சாலையில் குதித்து உயிர் பிழைத்தார்

சென்னை, 

சென்னை எழும்பூர் பகுதி நேற்று காலை வழக்கமான பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. இந்தநிலையில் காந்தி இர்வின் சாலையில் முதியவர் ஒருவர் ஓட்டிச்சென்ற மொபட்டில் தீப்பிடித்தது. சக வாகன ஓட்டிகள் இதை பார்த்து, ‘அய்யா... வண்டியில தீப்பிடித்து எரியுது... வண்டிய நிப்பாட்டுங்க...’, என்று அந்த முதியவரை நோக்கி எச்சரிக்கை விடுத்தனர்.

பதறிப்போன அந்த முதியவர் வாகனத்தை உடனடியாக நிறுத்தினார். ஏற்கனவே அவரது காலில் அடிபட்ட காயத்துக்கு கட்டு போட்டிருந்ததால் மெதுவாக இறங்க முடியவில்லை. தீயும் மளமளவென பற்றி எரிய தொடங்கியதால் அப்படியே சாலையில் குதித்தார். பின்னர் சிறிது தவழ்ந்தபடியே அந்த இடத்தை கடந்தார். அதற்குள் அவரது மொபட் முழுவதுமாக எரிய தொடங்கியது.

இந்தநிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் தலைமையிலான போலீசார் மொபட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பான் கருவி கொண்டு அணைத்தும் தீயின் வேகம் ஓயவில்லை. அந்தசமயம் அந்தவழியாக குடிநீர் லாரி ஒன்று சென்றது. உடனடியாக அந்த லாரியை மடக்கி, அதில் இருந்த நீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். அதற்குள் அந்த மொபட் கருகிவிட்டது.

மொபட் ஓட்டிச்சென்ற முதியவர் சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த பூ வியாபாரி பொன்னுச்சாமி (வயது 61) ஆவார். பூக்கடை பகுதிக்கு பூக்கள் வாங்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடுரோட்டில் மொபட்டில் பற்றி எரிந்த தீ நேற்று அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story