திருக்கார்த்திகையையொட்டி மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


திருக்கார்த்திகையையொட்டி மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 30 Nov 2020 5:36 AM IST (Updated: 30 Nov 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை யொட்டி நேற்று மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மலைக்கோட்டை,

தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு அவளது பேறுகாலத்தில் சிவபெருமான் அவளது தாயாக வந்து சுகப்பிரசவம் செய்த தலம்.

ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். மிகவும் பழமையான இந்த மலைக்கோட்டை கோவில் 273 அடி உயரமும் 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுவில் தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மையும், மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்கவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

கார்த்திகை தீப திருவிழா

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக மலைக்கோட்டை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதி முன் உள்ள 30 அடி உயர இரும்பு கோபுரத்தில் செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தித் துணியை கொண்டும், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி ஊற வைக்கப்பட்டது.

நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று மாலை 5 மணி அளவில் தாயுமான சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவ பக்தர்கள் இசை வாத்தியங்கள் முழங்க 5.30 மணிக்கு மேல் கோவிலில் இருந்து தீப பந்தத்துடன் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு நடைபெற்றது. மலையின் மேல் பகுதியில் உள்ள இலந்தை மரம் உள்ள இடம் வரை சென்று உச்சியை பார்த்த நிலையில் இருந்தனர்.

மகா தீபம்

பின்னர் சாமியுடன் கொண்டு வந்த தீப பந்தம் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன் இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை நடுப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்தடைந்தனர்.

மலைக்கோட்டையில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மலைக்கோட்டை சுற்றி உள்ள பல்வேறு கோவில்களிலும் நேற்று மாலை சுடலை தீபம் எனப்படும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் அனைவரும் தங்களது வீடுகளில் கார்த்திகை விளக்குகளை ஏற்றி தீப வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் கிரிவலம்

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசத்துடன் சிவ, சிவா என்றும் சாமியை வழிபடுவது வழக்கம்.

இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் நேற்று மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் யாரையும் மலைக்கோட்டை கோவிலுக்கு மேலே அனுமதிக்க படவில்லை. இந்த நிகழ்ச்சியில் கோவில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதே நேரம் நேற்று பவுர்ணமி என்பதால் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

Next Story