கார்த்திகை தீபத்திருவிழா: புதுவை கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது வீடுகளில் அகல் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு


கார்த்திகை தீபத்திருவிழா: புதுவை கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது வீடுகளில் அகல் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 30 Nov 2020 12:42 AM GMT (Updated: 30 Nov 2020 12:42 AM GMT)

புதுச்சேரியில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வீடுகளில் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.

புதுச்சேரி, 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் கார்த்திகை தீப திருநாளும் ஒன்றாகும். அதையொட்டி இந்துக்கள் தங்களின் வீடுகளில் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு களிமண், பீங்கான் மற்றும் உலோகத்தினால் ஆன சிறிய அகல் விளக்குகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் புதுவையிலும் பெண்கள் தங்களின் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வீட்டு வாசலில் அகல்விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வழிபட்டனர். இதனால் புதுவை நகர் முழுவதும் விளக்குகள் வெளிச்சத்தில் ஜொலித்தது.

கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், காமாட்சியம்மன் கோவில், முத்தாலம்மன் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாலையில் கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு கார்த்திகை பொரி, பழம் மற்றும் பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையும் காலை மும்முரமாக நடந்தது. இதனால் புதுவை நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட், முதலியார்பேட்டை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story