தஞ்சையில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் குடோன்- மரக்கடை எரிந்து நாசம் ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்


தஞ்சையில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் குடோன்- மரக்கடை எரிந்து நாசம் ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 30 Nov 2020 7:00 AM IST (Updated: 30 Nov 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பிளாஸ்டிக் குடோன்-மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் டபீர்குளம் ரோட்டில் வசித்து வருபவர் ரமேஷ்(வயது45). இவர் மானம்புச்சாவடி பழைய மாரியம்மன்கோவில் சாலை ஆடக்கார தெருவில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். இங்கு காலியான பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய இரும்பு பொருட்கள் ஆகியவற்றை வாங்கி, அவற்றை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்திற்கு வினியோகம் செய்து வந்தார்.

தினமும் பலர், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ததால் மலைபோல் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடந்தன. மேலும் இந்த பொருட்களை எல்லாம், எந்திரம் மூலம் சிதைத்து கட்டுக்களாகவும் கட்டி அடுக்கி வைத்து இருந்தனர். பல ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

தீ விபத்து

இந்தநிலையில் நேற்றுமாலை கார்த்திகை தீப திருநாளையொட்டி எல்லா வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். மாலை 6.45 மணி அளவில் திடீரென பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவியதால் பெரும் விபத்தாக மாறியது.

பிளாஸ்டிக் பொருட்கள் எரிவதை பார்த்த சிலர், குடோன் உரிமையாளருக்கும், தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள், 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பழைய பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ வேகமாக பரவியதால் கூடுதல் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

மரக்கடை தீப்பற்றியது

குடோனுக்கு இருபுறமும் நுழைவு வாயில் இருந்ததால் இருபுறமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

குடோனின் சுற்றுச்சுவர் தகரத்தால் அமைக்கப்பட்டு இருந்ததால் தீயை அணைப்பதற்கு வசதியாக அந்த தகரத்தை அப்புறப்படுத்திவிட்டு அந்த வழியாக குடோனுக்குள் சென்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் டமால்.. டமால்... என பயங்கர சத்தத்துடன் வெடித்ததுடன் கரும்புகை வெளியேறியது.

பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் ஒருவித துர்நாற்றம் வீசியது. மேலும் குடோனில் கியாஸ் சிலிண்டர்கள், மண்எண்ணெய் கேன் இருந்தன. இவற்றை தொழிலாளர்கள் உடனடியாக குடோனை விட்டு வெளியே அப்புறப்படுத்தினர். இந்தநிலையில் தீ மேலும் பரவியதால் குடோனுக்கு பின்புறம் தஞ்சை-நாகை சாலையில் உள்ள அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான மரக்கடையிலும் தீப்பற்றி எரிந்தது.

மரப்பொருட்கள் எரிந்தன

இந்த கடையில் இருந்த தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உள்ளிட்ட பொருட்களிலும் தீப்பிடித்து எரிந்தது. மேலும் மரப்பொருட்கள் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கட்டைகளிலும் தீ பிடித்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் அந்த மரக்கடைக்கும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 1½ மணிநேர போராட்டத்திற்கு பிறகு மரக்கடையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.

ஆனால் பிளாஸ்டிக் குடோனில் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இரவு 9.45 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. அதன்பிறகு புகை மட்டும் வந்து கொண்டே இருந்தது.

காரணம் என்ன?

இதை அறிந்த தாசில்தார் வெங்கடேஸ்வரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா, உதவி அலுவலர் இளஞ்செழியன் மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பட்டாசு வெடிக்கும்போது விழுந்த தீப்பொறியால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது அகல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தினால் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. முழுமையான சேத மதிப்பு எவ்வளவு என்பது பின்னர் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story