நாகையில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டம்


நாகையில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2020 7:22 AM IST (Updated: 30 Nov 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த காரப்பிடாகை வடக்குத்தெருவை சேர்ந்த கணவன்-மனைவிக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குடும்ப தகராறு இருந்து வருகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து கணவன், மனைவியையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு ஆதரவாக அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக தேசிய குழு உறுப்பினர் பிலோமினா என்பவர் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது போலீசாருக்கும், பிலோமினாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசாரை கண்டித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு பிலோமினா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 1 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிலோமினாவை மகளிர் போலீசார் குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி வெளிப்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு அவரை இறக்கிவிட்டு சென்று விட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பிலோமினா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் நீங்கள் கொடுக்கும் புகார் குறித்து அனைத்து மகளிர் போலீசார் தான் விசாரணை நடத்த முடியும். எனவே அங்கு செல்லுங்கள் என்று கூறினர். போலீசார் தன்னை ஆட்டோவில் ஏற்றும்போது தாக்கியதில் கழுத்து, முதுகு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறி பிலோமினா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story