ஆறாத வடுவை ஏற்படுத்திய புயல்: குமரியில் ‘ஒகி’ தாக்கி 3-ம் ஆண்டு நினைவு தினம்


ஆறாத வடுவை ஏற்படுத்திய புயல்: குமரியில் ‘ஒகி’ தாக்கி 3-ம் ஆண்டு நினைவு தினம்
x
தினத்தந்தி 30 Nov 2020 2:28 AM GMT (Updated: 30 Nov 2020 2:28 AM GMT)

குமரியில் ‘ஒகி‘ புயல் தாக்கி 3-ம் ஆண்டு நினைவையொட்டி, இறந்த மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குளச்சல்,

தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி ஒகி புயல் தாக்கியது. இந்த புயலின் ஆக்ரோஷம் குமரி மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சூறைக்காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. அதே சமயத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் பயங்கர காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலில் மூழ்கி பலியான கோர சம்பவம் நடந்தது.

அந்த வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 148 குமரி மீனவர்கள் புயலில் சிக்கி படகு கவிழ்ந்து பலியானார்கள். இதுதவிர தமிழக கடலோர பகுதிகளை சேர்ந்த மேலும் 24 மீனவர்களும் இறந்தனர்.

நினைவு அஞ்சலி

ஆறாத வடுவை ஏற்படுத்திய இந்த ஒகி புயல் தாக்கிய 3-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் புயலில் இறந்த 172 மீனவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடல் வீரர் தினம், வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் இறந்த மீனவர்களின் உருவ படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த படங்களுக்கு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பலியான மீனவர்களின் உறவினர்கள் சிலர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். ஒகி புயலின் தாக்கத்தில் இருந்து மீனவர்கள் இன்னும் மீளாததை இது நினைவூட்டியது.

இதில், தெற்காசிய மீனவர் தோழமை குளச்சல் கிளை செயலாளர் ஆரோக்கிய ராஜ், மீனவர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், மாவட்ட விசைப்படகு ஓட்டுனர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரெக்சன், குளச்சல் துறைமுக ஏலக்காரர்கள் வியாபாரிகள் சங்க இணை செயலாளர் ஜின்சிலின், அ.தி.மு.க. மீனவர் அணி ஆன்றோ ஜாக்சன் மற்றும் பலியான மீனவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை

பின்னர், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஆபத்தில் சிக்கினால் அவர்கள் கரையில் உள்ள உறவினர்களை தொடர்பு கொள்ள குமரி கடல் பகுதியில் சக்தி வாய்ந்த தொடர்பு மையம் அரசு அமைக்க வேண்டும். இலங்கையில் மீனவர்களுக்கு அரசு சார்பில் ரேடியோ டெலிபோன் வழங்கியுள்ளது போல் இந்திய மீனவர்களுக்கும் மத்திய அரசு ரேடியோ டெலிபோன் வழங்க வேண்டும். தமிழக அரசு சில மீனவர்களுக்கு மட்டும் மானிய விலையில் சாட்டிலைட் போன் வழங்கி உள்ளது. ஆனால், அதுவும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, மீனவர்களின் நலன் கருதி இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Next Story