கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு


கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு
x
தினத்தந்தி 30 Nov 2020 3:13 AM GMT (Updated: 30 Nov 2020 3:13 AM GMT)

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் 1,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதேபோல் பொதுமக்கள் கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தி மகிழ்ந்தனர்.

நாமக்கல்,

கார்த்திகை தீப திருவிழாவை நேற்று இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி பெண்கள் வீடுகள், தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். நாமக்கல் ரெங்கநாதர் கோவில் படிக்கட்டுகளிலும் நேற்று வழக்கம்போல் 1,008 தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி மகிழ்ந்தனர்.

நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் மகா சங்கல்பம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு 1,008 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் வைக்கப்பட்டு இருந்த விளக்குகளில் பெண்கள் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.

சொக்கப்பனை கொளுத்தினர்

இதேபோல் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில், சந்தைபேட்டை புதூர் செல்வவிநாயகர் கோவில், குட்டைதெரு விநாயகர் கோவில், கடைவீதி சக்தி விநாயகர் கோவில், தட்டாரத்தெரு ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் நகர் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தது. பெரும்பாலான கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சுற்றிலும் நின்ற பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உப்பை தூவினர். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நகர் முழுவதும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடந்தது. வீடுகள்தோறும் பெண்கள் கொலுக்கட்டை மற்றும் சுண்டல் அவித்து சாமிக்கு படைத்து, பின்னர் குடும்பத்தினருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன். சரஸ்வதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

திருகார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், புதுமாரியம்மன், பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், நன்செய் இடையாறு மாரியம்மன், திருவேலீஸ்வரர் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாண்டமங்கலம் வெங்கட்ரமண பெருமாள் கோவில், புதிய மற்றும் பழைய காசி விஸ்வநாதர் கோயில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், கபிலர்மலை பாலதண்டாயுதபாணி சாமி கோவில், அனிச்சம்பாளையம் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் மற்றும் பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் காவிரிக்கரையில் அமைந்துள்ள வள்ளி மணாளன் முருகன் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில், அக்ரஹாரம் சிவன்கோவில், பஜனை கோவில் தெருவில் உள்ள ராமநாத முருகன் கோவில் ஆகியவற்றில் கார்த்திகை தீபத்தையொட்டி கோவில் முன்பு தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மகா தீப தரிசனத்தை பார்த்து பரவசமடைந்தனர்.

Next Story