திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 30 Nov 2020 9:16 AM IST (Updated: 30 Nov 2020 9:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டதன் 2-ம் ஆண்டு தொடக்க விழா, தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகம் திறப்பு விழா, நூல்கள் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கலெக்டர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு திருப்பத்தூர் மகளிர் போலீஸ் நிலையம் அருகே கிராம சேவை மைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் 2-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு ப.சிவராஜி எழுதிய ‘திருப்பத்தூர் மாவட்டம் ஒரு அறிமுகம்’ சித்த மருத்துவர் விக்ரம்குமார் எழுதிய ‘சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தின் செயல்பாடுகள்’, ‘கண்டேன் பேரன்பு’, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் படித்துறை அறக்கட்டளை தலைவர் இளம்பருதியின் நூல்கள் ஆகியவற்றை அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட கலெக்டர் சிவனருள் அதை பெற்று கொண்டார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

மருத்துவ கல்லூரி

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தற்போது ஒரு ஆண்டு நிறைவு பெற்று உள்ளது. கடந்த ஒரு வருடமாக புதிய மாவட்டத்தின் அனைத்து அலுவலகங்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்கள் எளிதில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கடந்த காலங்களில் இருந்த கால தாமதங்கள் இல்லாமல் விரைவாக தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட மக்களை பாதுகாத்து மற்ற மாவட்டங்களை விட தொற்று குறைவாக உள்ள மாவட்டம் என்ற பெருமையை திருப்பத்தூர் மாவட்டம் பெற்று இருந்தது பாராட்டுக்குரியதாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் ஜோலார்பேட்டை தொகுதியில் ரூ.190 கோடியில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கொண்டு வரும் நாள் வெகு தொலையில் இல்லை. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பத்தூரில் மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கு வசதியாக திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்லூரிக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

முடியும் தருவாயில்...

திருப்பத்தூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலை அமைக்கும் பணி ஒப்பந்தம் முடிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வணிகவரித்துறை துணை ஆணையர் (கர்நாடகா) சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் லீலாசுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story