ஈரோட்டில் 3 வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.48 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த கணவன்-மனைவி கைது


ஈரோட்டில் 3 வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.48 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 30 Nov 2020 4:19 AM GMT (Updated: 30 Nov 2020 4:19 AM GMT)

ஈரோட்டில் 3 வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.48 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 புதிய கார்கள் மற்றும் ரூ.56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு,

கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளை மேலாளர் பிரியா ஸ்ரீ, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

ஈரோடு புதிய ஆசிரியர் காலனி 5-வது வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40), இவருடைய மனைவி ராதிகா (38). இவர் எங்களது வில்லரசம்பட்டி கிளையை அணுகி, கார் வாங்க கடன் கேட்டார். அப்போது அவர், தான் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராக பணிபுரிவதாக கூறினார்.

இதை நம்பி எங்களது கிளையில் ராதிகாவிற்கு புதிய கணக்கு அன்றே தொடங்கினோம். பின்னர், அவர் பணிபுரியம் நிறுவனத்தின் அடையாள அட்டை, வங்கிகளில் இருந்து பெறப்பட்ட 6 மாத சம்பள பட்டியல், 3 ஆண்டுகள் செலுத்தப்பட்ட வருமான வரி, கோவை ஹூண்டாய் நிறுவனத்தில் பெறப்பட்ட காருக்கான விலைப்பட்டியல் போன்றவற்றை சமர்ப்பித்தார்.

ஆய்வு

அதன் அடிப்படையில், கடந்த 17-ந்தேதி எங்களது வங்கியில் இருந்து ரூ.19 லட்சம் வரைவோலையாக சம்மந்தப்பட்ட கார் நிறுவனத்திற்கு வழங்கினோம். ஆனால் எங்களிடம் கடன் பெற்ற ராதிகா, அவரது பெயரில் காரை பதிவு செய்யாமல் அவரது கணவர் கார்த்திக் பெயரில் பதிவு செய்துள்ளார்.

வாகன பதிவின் போது கடனில் பெறப்பட்ட விவரம் குறிப்பிடாமல் பதிவு செய்துள்ளனர். மேலும், கடனில் பெற்ற காரின் ஆவணங்களையும் எங்களிடம் சமர்ப்பிக்கவில்லை. பல முறை அவர்களை தொடர்பு கொண்டும் முடியவில்லை. இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த நாங்கள் அவர் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்தோம்.

போலி ஆவணங்கள்

அப்போது, எங்களை ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான ஆவணங்கள், போலி முகவரி போன்றவற்றை தயாரித்து நம்ப வைத்து, மோசடி செய்தது தெரியவந்தது.

ராதிகா, கார்த்திக் ஆகிய 2 பேரும் இதேபோல், கார் வாங்குவதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திண்டல் கிளையில் ரூ.15 லட்சமும், மேட்டுக்கடை அருகில் உள்ள இந்தியன் வங்கியில் தனி நபர் கடன் ரூ.14 லட்சமும் போலி ஆவணங்கள் மூலம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

தம்பதியினர் கைது

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, அந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், போலீசார் ராதிகா, கார்த்திக் ஆகிய 2 பேரின் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராதிகா, கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்று வாங்கிய 2 புதிய கார்கள் மற்றும் ரூ.56 ஆயிரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story