கூடலூர் சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம்


கூடலூர் சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம்
x
தினத்தந்தி 30 Nov 2020 11:09 AM IST (Updated: 30 Nov 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில், சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் நம்பாலக்கோட்டை சிவன்மலையில் மாதந்தோறும் பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் காலை முதல் சிவலிங்கம், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று தரிசித்து வருகின்றனர். இதேபோல் கார்த்திகை பண்டிகையில் சிவன் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பரவாமல் இருக்க பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கார்த்திகை பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் சிவன்மலையில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மகா தீபம்

தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஹோமங்கள், அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு மலை உச்சியில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட அகண்ட கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் பக்தி கர கோஷமிட்டவாறு தரிசித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

இதேபோன்று கூடலூர் அருகே சூண்டி ஈசன் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஊட்டி பகுதியிலுள்ள எல்ஹில் முருகன், மாரியம்மன், காந்தல் காசி விஸ்வநாதர் உள்பட பல கோவில்களில் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story