தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 30 Nov 2020 11:29 AM IST (Updated: 30 Nov 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இங்கு ஆர்வத்தோடு வந்துள்ள நிர்வாகிகளை பார்க்கும்போது நிச்சயம் தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் இருக்கும் என்று கடைசியாக கூறினார். அவர் சொன்னதை நிறைவேற்றும் வகையில் நாம் தேர்தல் பணி செய்திட வேண்டும். பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்காக அ.தி.மு.க.வினர் பணியாற்றுவர் என்பது மக்களுக்கு தெரியும்.

அரசின் திட்டங்கள்

அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அதனை வாக்குகளாக மாற்றுவது தான் நமது பணியாகும். கடந்த 2006- 2011 -ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியின் போது மக்கள் பட்ட பாடு என்னவென்று நமக்கு தெரியும். குறிப்பாக நில அபகரிப்பு செய்து மக்களை மிரட்டினர். இன்றைக்கு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை மிரட்டுகிறார். கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் மற்றும் தாய்மார்களின் ஆதரவு நமக்கு அமோகமாக உள்ளது . எனவே அரசின் திட்டங்களை அவர்களிடம் எடுத்துக் கூறி அதனை வாக்காக மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

தேர்தல் பணி

இது அ.தி.மு.க.வில் மட்டும்தான் நடக்கும். நாம் ஒன்றுபட்டு தேர்தல் பணியாற்றினால் வருகிற 2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவது உறுதி. இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ். பேட்டை முருகன், கண்ணன், சுரேஷ்பாபு, ராஜா, எசாலம் பன்னீர், புண்ணியமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரிப், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத் தலைவர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story