மகன்கள் வீட்டை விட்டு விரட்டியதால் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி


கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியையும், அவரது மகளிடமும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி விசாரித்த போத
x
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியையும், அவரது மகளிடமும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி விசாரித்த போத
தினத்தந்தி 30 Nov 2020 11:29 PM IST (Updated: 30 Nov 2020 11:29 PM IST)
t-max-icont-min-icon

மகன்கள் வீட்டை விட்டு விரட்டியதால் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கொத்தரி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 70). இவர் நேற்று காலையில் சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கி கொண்டு இருந்தார். போலீசார் அவரிடம் இந்த தகவலை தெரிவித்தனர். உடனே அவர் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார். தீக்குளிக்க முயன்ற அந்த மூதாட்டியிடம் பரிவுடன் விசாரித்தார்.

வீட்டை விட்டு விரட்டினர்
அப்போது வள்ளியம்மை, கலெக்டரிடம் கண்ணீர்மல்க கூறியதாவது, தன்னுடைய கணவர் குமரப்பன் இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய 2 மகன்களும் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். தற்போது என்னுடைய 2-வது மகள் சோலை அழகு வீட்டில் தான் இருந்து வருகிறேன். வயதான காலத்தில் மகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. மகன் வீட்டில் இருந்தால் தானே தாய்க்கு பெருமை. இது குறித்து பள்ளத்தூர் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தீக்குளித்து சாக முடிவு செய்ததாக கூறினார்.

இதை தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உடனடியாக பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மூதாட்டி கொடுத்த புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் பாராட்டு
பின்னர் அந்த மூதாட்டியிடம், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தற்கொலைக்கு முயற்சிப்பது தவறு என்றும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் வந்து தயங்காமல் தெரிவியுங்கள் என்றார். பின்னர் அவரது மகள் சோலை அழகுவிடம் தாயாரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். தீக்குளிக்க முயன்ற பெண் இருந்த இடத்திற்கே வந்து அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டரை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Next Story