கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் அவதி
குடியாத்தம் நகரின் நடுவே ஓடும் கவுண்டன்யமகாநதி ஆற்றின் குறுக்கே பெரியார் சிலையில் இருந்து சந்தப்பேட்டை பகுதிக்கு செல்ல காமராஜர் மேம்பாலமும், கெங்கையம்மன் கோவில் அருகே தரைப்பாலமும் உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. அதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெறும்.
தற்போது கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள், ஆபத்தை பொருட்படுத்தாமல் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு, தரைப்பாலத்தில் ஓரு அடிக்குமேல் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக வாகனங்களை ஓட்டிச்சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்று இருந்ததால் ஒரு சில போலீசார் மட்டுமே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ஈடுபட்டனர். அவர்கள் பல மணி நேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர்.
Related Tags :
Next Story