மதுரையில் பரிதாபம்: 2 மகள்களுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் அருண்பாண்டியனுடன் வளர்மதி மற்றும் அவரது மகள்கள்; கொலை செய்யப்பட்ட வளர்ப்பு நாய்
x
கணவர் அருண்பாண்டியனுடன் வளர்மதி மற்றும் அவரது மகள்கள்; கொலை செய்யப்பட்ட வளர்ப்பு நாய்
தினத்தந்தி 1 Dec 2020 1:42 AM IST (Updated: 1 Dec 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கணவன் இறந்த சோகத்தில் பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் இறப்பு
திருச்சியை சேர்ந்தவர் அருண்பாண்டியன், கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி வளர்மதி (வயது 38). இந்த தம்பதிக்கு அகிலா (20), பிரீத்தி (17) என்ற மகள்கள் இருந்தனர். அகிலா மதுரை அரசு கல்லூரியிலும், பிரீத்தி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருண்பாண்டியனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. அந்த கட்டியை அகற்றினால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த வளர்மதி தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை காப்பாற்றினர்.

இதனை தொடர்ந்து வளர்மதியை அவரது சகோதரி மதுரைக்கு அழைத்து வந்தார். பின்னர் வளர்மதி தனது கணவர் மற்றும் மகள்களுடன் ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தில் வசித்து வந்தார்.

மேலும் அருண்பாண்டியன் மதுரையில் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அருண்பாண்டியனின் இறப்பு அவரது குடும்பத்தினரை வெகுவாக பாதித்தது. கணவரை இழந்ததில் இருந்து வளர்மதி வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.

தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வளர்மதி, தனது 2 மகள்களுடன் மாடியில் உள்ள அறையில் படுக்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் யாரும் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வளர்மதியின் சகோதரி அங்கு வந்தார். வெகுநேரமாக கதவை தட்டியும் அவர்கள் யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவர் ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு வளர்மதி, அவரது மகள்கள் அகிலா, பிரீத்தி ஆகியோர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் தாங்கள் செல்லமாக வளர்த்த நாயையும் கழுத்தை நெரித்து கொலை செய்தும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரே குடும்பத்தில் தாய், மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story