மறைமலைநகர் அருகே விபத்து: லாரி-டிராக்டர் மோதல்; வடமாநில டிரைவர் பலி - 9 பேர் படுகாயம்


மறைமலைநகர் அருகே விபத்து: லாரி-டிராக்டர் மோதல்; வடமாநில டிரைவர் பலி - 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Dec 2020 3:38 AM IST (Updated: 1 Dec 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

மறைமலை நகர் அருகே டிராக்டர் மீது பின்னால் வந்த டிரைலர் லாரி மோதிய விபத்தில், டிரைவர் பலியானார். உடன் சென்ற 9 பேர் படுகாயமடைந்தனர்.

வண்டலூர், 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சவரன் சிங் (வயது 29). இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டிராக்டர் ஒன்றில் 9 பேரை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். மறைமலைநகர் சாமியார் கேட் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிரைலர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சவரன் சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் டிராக்டரில் பயணம் செய்த 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், இறந்துபோன போன சவரன்சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டி கிராமத்தில் உள்ள ராஜவீதியை சேர்ந்தவர் சச்சின் (24). இவர் மறைமலைநகரில் உள்ள பேரமனூரில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் கார் தொழிற்சாலை அருகே சாலை வளைவில் திரும்பும் போது, தாம்பரம் நோக்கி வந்த கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் இருந்து தூக்கி வீசப்பட்ட சச்சின் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன சச்சின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story