அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகை


அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகை
x
தினத்தந்தி 30 Nov 2020 10:58 PM GMT (Updated: 30 Nov 2020 10:58 PM GMT)

அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

செந்துறை,

அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்காக ஆனந்தவாடி கிராமத்தில் 1982 ஆம் ஆண்டு சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் 270 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் ஒன்றுக்கு 2,500 ரூபாய்க்கு 161 விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. அப்போது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 37 ஆண்டுகளாக அவர்களுக்கு வேலை வழங்காத நிலையில் அவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அதில் தற்போது நிரந்தர வேலைக்கு பணியிடம் இல்லை என்று கூறி 57 விவசாய குடும்பத்தினருக்கு ஒப்பந்த வேலை வழங்கப்பட்டது.

மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், மேலும் 130 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாவும் தெரிவித்த விவசாயிகள், நிலம் கொடுத்த 57 விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

முற்றுகை

இந்நிலையில் நேற்று தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், சினிமா இயக்குனருமான கவுதமன் தலைமையில் ஆனந்தவாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து அரசு சுண்ணாப்புக்கல் சுரங்கத்தை, நிலம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பதில் கிடைக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் சுரங்க வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் இயக்குனர் கவுதமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால், சுரங்க வாயில் முன்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி தலைமையில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கலவர தடுப்பு வாகனங்களுடன் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story