கள்ளக்குறிச்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு; பணிநிரந்தரம் செய்யக்கோரிக்கை


பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது எடுத்த படம்.
x
பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது எடுத்த படம்.
தினத்தந்தி 1 Dec 2020 5:37 AM IST (Updated: 1 Dec 2020 5:37 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கலெக்டர் கிரண்குராலாவிடம் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் செயலாளர் தலைமையில் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் கிரண்குராலாவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

16,549 பகுதிநேர ஆசிரியர்கள்

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி எண் 110-ன் கீழ் கடந்த 11.11.2011-ந் தேதி 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 2011-2012-ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டனர். உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி (கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி) ஆகிய கல்வி இணைச்செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பாடம் நடத்தி வருகின்றோம்.

இந்த நிலையில் 3-வது கல்வியாண்டில் ரூ.2 ஆயிரம், 6-வது கல்வியாண்டில் ரூ.700 உதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஊதியம் உயர்த்தப்படவில்லை. வழங்கப்படும் ரூ.7,700 தொகுப்பூதியத்தை கொண்டு விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றோம். மே மாத சம்பளம் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கவில்லை.

சலுகைகள் வழங்கவில்லை

மேலும் போனஸ், பண்டிகை முன்பணம், 7-வது ஊதியக்குழுவின் 30 சதவீத ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., விபத்து காப்பீடு போன்ற சலுகைகள் இதுவரை வழங்கவில்லை. இந்த நிலையிலும் அரசின் உத்தரவை ஏற்று ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த காலங்களில் பள்ளிகளை திறந்து வைத்து பாடம் நடத்தினோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். எனவே தற்போதுள்ள சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story