பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வெள்ளாறு விவசாயிகள் கவலை


பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வெள்ளாறு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 1 Dec 2020 5:42 AM IST (Updated: 1 Dec 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட பகுதியில் தண்ணீரின்றி வெள்ளாறு வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையில் இருந்து வசிஷ்டபுரம் ஊராட்சி வரை சுமார் 10 கிராமங்கள் வெள்ளாற்றின் கரையில் உள்ளன. இந்த கிராமங்களுக்கு நீராதாரமாக வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாற்று தண்ணீர் சேலம் மாவட்டத்தில் தொடங்கி பெரம்பலூர் மாவட்ட பகுதிகள் வழியாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே பெரம்பலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அத்தியூர் ஏரி, ஒகளூர் ஏரி, வடக்கலூர் ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி உள்பட சிறியதும், பெரியதுமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு சென்றடையும்.

வறண்டு கிடக்கிறது

வேப்பூர் வடக்கு ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள், இந்த வெள்ளாற்று நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் நவம்பர் மாத முதல் வாரத்திலேயே ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் இல்லாமல் வெள்ளாற்று பகுதிகள் மற்றும் தொழுதூர் அணைக்கட்டு வறண்டு கிடக்கிறது. இதனால் வெள்ளாற்றில் கீழ குடிக்காடு மற்றும் அகரம்சிகூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.

வெள்ளாற்றின் துணை நதியான சின்னாற்றில் நிவர் புயலில் பெய்த மழையிலும் தண்ணீர் வரத்து இல்லை. வெள்ளாற்றுக்கு நீர் வரத்து பகுதிகளான சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இனியாவது பலத்த மழையை பெய்து, வெள்ளாற்றில் தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலையுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story