திருச்சி காந்தி மார்க்கெட்டில் மும்மத வழிபாட்டுடன் காய்கறி விற்பனை இரவு முதல் தொடங்கியது


திருச்சி காந்தி மார்க்கெட்டில் மும்மத வழிபாட்டுடன் காய்கறி விற்பனை இரவு முதல் தொடங்கியது
x
தினத்தந்தி 1 Dec 2020 1:38 AM GMT (Updated: 1 Dec 2020 1:38 AM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை நேற்று இரவு முதல் தொடங்கியது. நேரக் கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டது

திருச்சி,

மதுரை ஐகோர்ட்டு தடை நீங்கியதையடுத்து, கொரோனாவால் மூடப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் 8 மாதங்களுக்கு பின் கடந்த 27-ந் தேதி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜனால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. நேற்று மாலையுடன் அப்பணிகள் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 6.20 மணிக்கு, காந்தி மார்க்கெட்டில் உள்ள காந்தி சிலை முன்பு, இந்து, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மத வழிபாட்டுடன் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டது. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், இளைஞர் அணி தலைவர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது கோவிந்தராஜூலு பேசியதாவது:-

நேரக்கட்டுப்பாடு அட்டவணை

காந்தி மார்க்கெட்டிற்குள் மொத்த வியாபாரம் இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 5 மணிவரை நடைபெறும். இக்கால கட்டத்தில் காய்கறிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் காய்கறிகளை இறக்கி விட்டு, அதிகாலை 5 மணிக்குள் வெளியேறி விட வேண்டும். காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணிவரை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை, மாநகராட்சி பணியாளர்களால் துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை அன்றைய வியாபாரத்தின் வரவு, செலவு கணக்கு விவரங்களை பார்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, முக கவசம்

காந்தி மார்க்கெட் வியாபாரிகளும், தொழிலாளர்களும் முககவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளி பின்பற்றிட வேண்டும். காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வரும் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது அவசியம். எனவே, பொதுமக்கள் நேரக்கட்டுப்பாடு மற்றும் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

லாரி, லாரியாக இறங்கிய காய்கறி

இரவு 9 மணி முதல் காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் விறு, விறுப்பாக தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து காந்தி மார்க்கெட்டுக்கு லாரிகளில் காய்கறிகள் வந்து இறங்கின. அவற்றை உடனடியாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கும் பணியில் ஈடுபட்டனர். சிலர் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை பராமரித்து விற்பனை தொடங்கினர். காந்தி மார்க்கெட்டுக்கு மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் ஷிப்டு செய்யப்பட்டதால், ஜி-கார்னர் திடலில் இதுவரை நடைபெற்று வந்த மொத்த வியாபாரத்திற்கு நேற்று இரவு முதல் முழுக்கு போடப்பட்டது.

Next Story