பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்


பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2020 4:11 AM GMT (Updated: 1 Dec 2020 4:11 AM GMT)

விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, நல்லம்பள்ளி ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதாக அறிவிப்பாணை வெளியானது.

இதன் காரணமாக விவசாய நிலங்கள் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சின்னசாமி, துளசிமணி, பொன்னையன், முனுசாமி, அர்ஜூனன், மல்லையன், விடுதலை விரும்பி, பழனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வன்னியரசு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

7 மாவட்ட விவசாயிகள்

இந்த போராட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்தினால் 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை விவசாய விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தக்கூடாது. இந்த திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சாலையோரங்களில் பெட்ரோலிய குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் தணிகாசலம் ஆகியோர் விவசாய சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்தால் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story