திருச்செங்கோட்டில் துணிகரம்: பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு


திருச்செங்கோட்டில் துணிகரம்: பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 1 Dec 2020 10:15 AM IST (Updated: 1 Dec 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் துணிகரம்: பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியை சேர்ந்தவர் கண்ணழகன் (வயது 51). இவர் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் ரியல் பழமுதிர்சோலை என்ற பெயரில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பழக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை 8.30 மணிக்கு கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3½ லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திருச்செங்கோடு நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கண்ணழகன் கல்லாப்பெட்டியில் பணத்தை வைத்து சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. பழக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கண்ணழகன் கடையை பூட்டும்போது அணைத்து விட்டு சென்றதால் மர்மநபர்கள் குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. எனினும் அருகே உள்ள துணிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பழக்கடையில் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் சமையல் ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.10 லட்சம் மற்றும் 45 பவுன் நகை திருடப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்கள் பிடிபடாத நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேற்கு ரத வீதியில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது திருச்செங்கோடு பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story