தேனி, கம்பத்தில் வங்கிகளை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 49 பேர் கைது


தேனியில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
x
தேனியில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
தினத்தந்தி 2 Dec 2020 12:16 AM IST (Updated: 2 Dec 2020 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேனி, கம்பத்தில் வங்கிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்கிகள் முற்றுகை
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி, கம்பத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேனியில் கனரா வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் முல்லை முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து தேனியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் முன்னிலை வகித்தார். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 25 பேரை கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

சி.ஐ.டி.யூ.
இதேபோல் தேனியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட பொருளாளர் சண்முகம், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் தேவராஜன், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி மற்றும் பலர் கலந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story