இரவில் கார் டயர் பஞ்சரானதால் சாலையில் நின்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு; கணவர் கண் முன்பு துணிகரம்
தஞ்சை அருகே இரவில் கார் டயர் பஞ்சரானதால் காரில் இருந்து இறங்கி சாலையில் நின்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை ஆசாமிகள் பறித்து சென்றனர்.
கணவர் கண் முன்பு நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டயர் பஞ்சரானது
தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது36). மின் வாரிய தற்காலிக ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் தனது காரில் தனது குடும்பத்துடன் தஞ்சைக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தார்.
தஞ்சை - நாகை சாலையில் கோவிலூர் மயில்பண்ணை பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் டயர் பஞ்சரானது. இதனால் காரை சாலையோரம் நிறுத்திய கார்த்திக், கார் சக்கரத்தை கழற்றிக்கொண்டு இருந்தார். இதனால் காரில் இருந்து இறங்கிய கார்த்திக் மனைவி கார் அருகே நின்று கொண்டிருந்தார்.
சங்கிலி பறிப்பு
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென கார்த்திக் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இரவில் கணவர் கண் முன்பு மனைவியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் சாலியமங்கலம் பகுதி மக்களிடையே பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story