வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏரியில் காகித கப்பல் விட்டு நூதன போராட்டம்


வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏரியில் காகித கப்பல் விட்டு நூதன போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2020 11:39 PM GMT (Updated: 1 Dec 2020 11:39 PM GMT)

வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏரியில் காகித கப்பல் விட்டு நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தில் காகித கப்பலை செய்து ஏரியில் விட்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. மேலும் பதுக்கலுக்கும், கள்ளச்சந்தையை ஊக்குவிக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களை விவசாயத்தில் கொல்லைப்புற வழியாக கொண்டு வந்து இறக்கி விவசாயத்தில் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி வருங்கால தலைமுறையினரை அழிக்கவல்ல திட்டமாகும்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை வழங்கி இந்திய விவசாய விளை பொருட்களை உள்நாட்டு தேவை போக மீதமுள்ளதை கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதன் மூலம் நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யலாம். அதேபோல் விவசாயிகள் இயற்கை உரங்களை கொண்டு விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும்போது இடுபொருட்களின் செலவு, விதைகளின் செலவு, களை மேலாண்மை செலவு, நீர் பயன்படுத்தும் அளவு உள்ளிட்டவை குறையும். கால்நடைகளுக்கும் தரமான தீவனங்களை உற்பத்தி செய்து தர முடியும். இதனை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசு விவசாயிகளை திசை திருப்ப வெறுமனே காகிதத்தில் சட்டம் இயற்றி விவசாயிகளை வஞ்சிப்பது ஆரோக்கியமான போக்கு இல்லை என்பதனை வலியுறுத்தி கோரிக்கைகள் அடங்கிய காகிதத்தில் கப்பல் செய்து விடும் போராட்டத்தில் ஈடுபட்டோம், என்றனர்.

கோஷம்

மேலும் அறவழியில் போராடும் தமிழக விவசாயிகளை, போலீசார் தாக்குவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். சேனாபதி கிராம விவசாய சங்க நிர்வாகி கனகராஜ், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி உள்ளிட்ட விவசாயிகள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story