கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு


கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 2 Dec 2020 4:25 AM GMT (Updated: 2 Dec 2020 4:25 AM GMT)

கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போக்குவரத்து காவலர் உள்பட 10 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

கடலூர்,

மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களையும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி 1-ந் தேதி (அதாவது நேற்று) கடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி முற்றுகையில் ஈடுபடுவதற்காக நேற்று காலை 10 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஒன்று திரண்டனர்.

இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

தள்ளுமுள்ளு

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 11 மணி அளவில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் தபால் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடுத்தனர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டையை தள்ளி விட்டதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது விழுந்தது.

10 போலீஸ்காரர்கள் காயம்

இதில் போக்குவரத்து காவலர் தேவநாதன் உள்பட 10 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். உடனே அவர்களை சக போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், போலீஸ் தடையையும் தாண்டி கடலூர் மஞ்சக்குப்பம் ரவுண்டானா அருகில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது அவர்கள் போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கட்சியினர் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை மருத்துவமனைக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி திருமண மண்டபத்திலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story