கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2020 7:30 PM IST (Updated: 2 Dec 2020 7:14 PM IST)
t-max-icont-min-icon

கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம், 

செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் செங்கம் அருகே உள்ள தீத்தாண்ப்பட்டு, வளையாம்பட்டு, காயம்பட்டு, தோக்கவாடி, சொர்ப்பனத்தல் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனால் செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் பெரிய ஏரிக்கு குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வராததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர். காயம்பட்டு ஏரி நிரம்பி அங்கிருந்து முறையாறு வழியாக செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஏரிக்கு நீர் செல்வது வழக்கம். ஆனால் கடந்த பல வருடங்களாக காயம்பட்டு ஏரியிலிருந்து கரியமங்கலம் ஏரிக்கு தண்ணீர் செல்வதில்லை. நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் ஏரிக்கு பல வருடங்களாக தண்ணீர் வராமல் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கரியமங்கலம் பெரிய ஏரியை நம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர். காயம்பட்டு ஏரியில் இருந்து கரியமங்கலம் ஏரிக்கு செல்லும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகளை அகற்றி கரியமங்கலம் ஏரிக்கு நீர் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story