குரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து சாவு; காரணம் என்ன?


மனிஷாஸ்ரீ
x
மனிஷாஸ்ரீ
தினத்தந்தி 3 Dec 2020 12:18 AM GMT (Updated: 3 Dec 2020 12:18 AM GMT)

குரூப்-4 பணிக்கான கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். அதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சென்னையில் கலந்தாய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் குருநாதன் (வயது 54). இவருடைய மகள் மனிஷாஸ்ரீ (23). இவர் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து சென்னையில் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தனது தந்தை குருநாதன், அக்காள் கணவர் அய்யனார் (34) ஆகியோருடன் சென்னை சென்றார். அங்கு கலந்தாய்வில் கலந்து கொண்டார். கலந்தாய்வில் அவருக்கு ஊரக மருத்துவ துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தவறி விழுந்த பெண்
பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு, சென்னை-செங்கோட்டை சிறப்பு ரெயிலில் ஊருக்கு வந்தனர். இந்த ரெயில் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பையநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த மனிஷாஸ்ரீ படிக்கட்டு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து விழுந்ததாக தெரிகிறது.

இதையறியாமல் குருநாதனும், அய்யனாரும் ரெயிலில் தூங்கிக்கொண்டு இருந்தனர். சங்கரன்கோவிலுக்கு ரெயில் வந்தவுடன் இறங்கும் போது, மனிஷாஸ்ரீ அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை ரெயிலில் தேடினர்.

போலீசார் விசாரணை
உடனே அவர்கள் இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார், தண்டவாள பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது கோப்பையநாயக்கன்பட்டி அருகே உள்ள தண்டவாள பகுதியில் மனிஷாஸ்ரீ பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பரிதாபமாக இருந்தது.

குரூப்-4 பணி கலந்தாய்வுக்கு சென்று ஊர் திரும்பும் வழியில் ரெயிலில் இருந்து மனிஷா ஸ்ரீ விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story