கிணற்றில் சிறுமி பிணமாக மீட்பு: முன்விரோதம் காரணமாக பெரியம்மாவே வீசி கொன்றது அம்பலம்
ராணிப்பேட்டை அருகே சிறுமி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், முன்விரோதம் காரணமாக பெரியம்மாவே கிணற்றில் வீசி கொன்றது அம்பலமாகி உள்ளது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் பிணமாக மீட்பு
ராணிப்பேட்டை அருகே உள்ள செட்டித்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் காந்தி. கட்டிட மேஸ்திரி. இவரது மகள் கோபிகா (வயது 3), கடந்த மாதம் 30-ந் தேதி மதியம் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென காணாமல் போனாள். பெற்றோர் அக்கம் பக்கம் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இது குறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சிறுமி விழுந்திருக்கலாம் என கருதி சிப்காட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் சிறுமியை தேடினர். இரவாகி விட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டு, 2-வது நாளாக நேற்று முன்தினம் 2 மோட்டார்கள் மூலம் கிணற்று நீரை வெளியேற்றி, சேற்றில் சிக்கியிருந்த சிறுமியை பிணமாக மீட்டனர்.
சிறுமி கோபிகாவின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை, பெரியம்மாவே கிணற்றில் வீசி கொன்றது தெரிய வந்தது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பெரியம்மாவே கிணற்றில் வீசினார்
சிறுமி கோபிகாவின் பெரியப்பா சேட்டு என்பவரின் வீடும், கோபிகாவின் வீடும் அருகருகே உள்ளது. குழந்தைகள் தெருவில் விளையாடுவதில் சேட்டுவின் மனைவி புஷ்பராணிக்கும், சிறுமி கோபிகாவின் குடும்பத்தினருக்கும் சண்டை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சண்டை ஏற்படும்போதெல்லாம் காலம் முழுவதும் வேதனைப்படும் அளவுக்கு செய்கிறேன் பார் என்று
கோபிகாவின் தாயார் ராஜேஸ்வரியிடம், புஷ்பராணி சவால் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி மதியம் சிறுமி கோபிகா தெருவில், மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த கோபிகாவின் தாய் ராஜேஸ்வரி, சிறுமிக்கு தோசை சுடுவதற்காக வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோபிகாவின் பெரியம்மா புஷ்பராணி, கோபிகாவை நைசாக தூக்கி சென்று ஈவு இரக்கமின்றி அருகில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில் வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டார்.
கைது
ராஜேஸ்வரி சமையலை முடித்துவிட்டு வந்தபோது சிறுமியை காணவில்லை. சிறுமியை தேடியபோது, புஷ்பராணிதான் கோபிகாவை தூக்கி சென்றார் என்று உடன் விளையாடிய சிறுவர்கள் கூறியுள்ளனர். சிறுமியை தூக்கிச்சென்ற காட்சி அந்தப்பகுதியில் ஒரு வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புஷ்பராணியிடம் போலீசார் விசாரித்தபோது கோபிகாவை கிணற்றில் வீசி கொன்றதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று புஷ்பராணியை (42) கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கோபிகாவை ஈவு, இரக்கமின்றி பெரியம்மாவே கிணற்றில் வீசி கொன்றது செட்டித்தாங்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story