ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி


ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி
x
தினத்தந்தி 3 Dec 2020 10:58 AM IST (Updated: 3 Dec 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் போலி பணிநியமன ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு அருகே நஞ்சை ஊத்துக்குளி சாமிநாதபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 31) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். நான் அரசு வேலையில் சேருவதற்கு முயற்சி செய்து வருகிறேன். இந்தநிலையில் ஈரோடு பூந்துறைரோட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் அறிமுகமாகி தனக்கு அரசு உயர் அதிகாரிகளையும், அரசியல் பிரமுகர்களையும் தெரியும் என்றும், வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணியை வாங்கி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதற்கு ரூ.2½ லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவரை நம்பி ரூ.1 லட்சத்தை முன்பணமாக கொடுத்தேன். பணிநியமன ஆணை பெறும்போது மீதமுள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

போலி பணிநியமன ஆணை

கடந்த ஆண்டு மே மாதம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, எனக்கு வேலை வாங்கி கொடுப்பதாக கூறியவரும், மேலும் சிலரும் வந்து தமிழக அரசு முத்திரையுடன் கூடிய பணிநியமன ஆணையை வழங்கினார்கள். இதனால் அவரிடம் ரூ.1½ லட்சத்தை கொடுத்தேன். அரசிடம் இருந்து தகவல் வந்ததும் பணிக்கு சேர்ந்து விடலாம் என்று அவர்கள் கூறிவிட்டு சென்றார்கள். அதன்பிறகு சுமார் 1½ ஆண்டுகளாகியும் எந்தவொரு தகவலும் வரவில்லை. அதன்பிறகு பணிநியமன ஆணையை பற்றி விசாரித்தபோது, அது போலி முத்திரையுடன் கூடிய பணிநியமன உத்தரவு என்பது தெரியவந்தது. இதேபோல் பலரிடம் அவர்கள் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணிநியமன ஆணைகளை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இதேபோல் ஈரோட்டை சேர்ந்த பிரசாந்த், வனிதா, முருகன் உள்பட பாதிக்கப்பட்ட சிலர் புகார் மனுக்களை கொடுத்தனர்.

Next Story