3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்; 1,086 பேர் கைது
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 1,086 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சத்தியா தலைமை தாங்கினார். இதில் தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தனியார் துறை பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வேலை வாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் 23 பெண்கள் உள்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில், நேற்று மாற்றுத்திறனாளிகள் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் எம்.பாக்கியராஜ் தலைமை தாங்கினார். அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.பின்னர் அவர்கள் திடீரென அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.மறியலில் ஈடுபட்ட 125 பேரை கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும்
மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
போளூர்
போளூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைச் செயலாளர் சி.ஏ.செல்வம் தலைமை தாங்கினார்.
சாலை மறியலில் ஈடுபட்ட 42 பெண்கள் உள்பட 97 பேரை போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆரணி
ஆரணி பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சந்திரசேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தாலுகா செயலாளர் ராஜதுரை, தாலுகா பொருளாளர் அருள்குமார், தாலுகா
துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், துணைச் செயலாளர் உலகநாதன், செயற்குழு உறுப்பினர்கள் குமரேசன், செல்வராஜ் உள்பட 307 பேர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 307 பேரை ஆரணி டவுன் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
செங்கம்
செங்கம் துக்காப்பேட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story