தூத்துக்குடியில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கை திரிகோணமலையில் கரையை கடந்து, இன்று மன்னார் வளைகுடா வழியாக பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட தென் தமிழகத்தின் உள்புற மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் புரெவி புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை 1077, 0461-2340101, 94864 54714 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story