சென்னையில் 3-வது நாளாக பா.ம.க.-வன்னியர் சங்கத்தினர் போராட்டம்; ஏராளமானோர் கைது


சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்
x
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்
தினத்தந்தி 4 Dec 2020 6:38 AM IST (Updated: 4 Dec 2020 6:38 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னையில் 3-வது நாளாக நேற்றும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இடஒதுக்கீடு கோரி போராட்டம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணியிடங்களில் வன்னியர்களுக்கு கிடைத்த இடங்கள் எவ்வளவு? என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் சென்னையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் 3-வது நாளாக நேற்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், வக்கீல்களுக்கான சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:-

உரிமை கேட்டு போராடுகிறோம்
தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமாக வாழ்ந்து வரும் வன்னியர்கள், கல்வி மற்றும் அரசு பணிகளில் பின்னடைவு நிலையிலேயே இருந்து வருகிறார்கள். அந்தப் பெரும்பான்மை சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் தான் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் வன்னியர் சமுதாயத்திற்கு உரிய இட ஒதுக்கீடு இன்று வரை கிடைக்கவில்லை. பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயம் முன்னேறாமல், தமிழ்நாடு எப்படி முன்னேறும்? நாங்கள் வேலை இல்லாமல் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. வாழ்வதற்கான உரிமை கேட்டு போராடுகிறோம். அடிப்படை உரிமை கேட்டு போராடுவது எந்த வகையில் தவறு என்பது எங்களுக்கு தெரியவில்லை.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
இது நிச்சயம் அரசியல் போராட்டம் இல்லை. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். எனவே தான் எங்கள் உணர்வை அரசுக்கு தெரியப்படுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, இதற்கான சட்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூட, வன்னியர்களுக்கு இடஒதுக் கீடு தேவை என்பதும், அவர் கள் இன்னமும் கல் உடைப்பு உள்ளிட்ட வேலைகளிலும், விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனாலும் இதுவரை வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை அரசு இயற்றவே இல்லை. எனவே தான் இந்த முறை உணர்வுப்பூர்வமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எங்களது போராட்டத்தை ஒடுக்க போலீசார் எவ்வளவோ முயற்சித்து வருகிறார்கள். இதுவும் நல்லது தான். அப்படி செய்து வருவதால் தான் எங்களது போராட்ட செய்தி மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கைது
அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகேயுள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story