‘புரெவி’ புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை; கண்மாய்கள் நிரம்பின


வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்ததையும் படத்தில் காணலாம்
x
வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்ததையும் படத்தில் காணலாம்
தினத்தந்தி 4 Dec 2020 9:38 AM IST (Updated: 4 Dec 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

‘புரெவி‘ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி மறுகால் சென்றன.

பலத்த மழை
‘புரெவி‘ புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டன. மேலும் சில இடங்களில் பலத்த மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன.

காரைக்குடி பகுதியில் உள்ள சத்யாநகர், வ.உ.சி.சாலை, காளவாய்பொட்டல் பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். சில பெண்கள் வீடுகளில் புகுந்த மழைநீரை பாத்திரம் மூலம் வெளியே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.தொடர் மழையினால் டீ கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. திருப்பத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்தது. இந்த மழை நேற்று மாலை வரை நீடித்தது.

கண்மாய்கள் நிரம்பின
மேலும் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அதை சரி செய்து பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்கினர். இதேபோல் மானாமதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அவை நிரம்பின. மேலும் மண்பாண்ட தொழிற்கூடங்களில் தண்ணீர் புகுந்ததால் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதேபோல் காளையார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை காரணமாக பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து வரத்தொடங்கியது. இதுதவிர பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகளுக்கு தண்ணீர் வரத்து வரத்தொடங்கியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர் மழை காரணமாக பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காரைக்குடி பகுதியில் உள்ள செஞ்சை நாட்டார் கண்மாய், வீரையன் கண்மாய், குடிக்காத்தான் கண்மாய், அதலை கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் தொடர் மழையால் நிரம்பி மறுகால் சென்றன.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிவகங்கை-35.2, மானாமதுரை-23, இளையான்குடி-34.5, திருப்புவனம்-29.4, தேவகோட்டை-21.2, காரைக்குடி-20.2, திருப்பத்தூர்-17.3, காளையார்கோவில்-27.8, சிங்கம்புணரி-19, மாவட்டத்தில் நேற்று அதிகஅளவாக சிவகங்கையில் 35.2 மில்லி மீட்டரும், குறைந்தளவாக திருப்பத்தூரில்-17.3 மில்லி மீட்டரும் பதிவாகியிருந்தது.

Next Story