திருவண்ணாமலையில் பட்டப்பகலில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை; பழிக்கு பழியாக நடந்ததா? என போலீஸ் விசாரணை
திருவண்ணாமலையில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க் பாபு (வயது 49). ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார். பங்க் பாபு, அவரது நண்பர் திருவண்ணாமலையை சேர்ந்த பழனி (45) என்பவருடன் நேற்று காலை சுமார் 11 மணியளவில் அந்த பகுதியில் உள்ள டீ கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.
இவர்களை மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து உள்ளனர். மேலும் அந்த நபர்களின் கூட்டாளிகள் 2 பேர் டீ கடையில் நின்று கொண்டிருந்தனர். கடைக்கு வந்த பங்க் பாபுவை கடையில் நின்றிருந்த மர்ம நபர்கள் 2 பேரும் திடீரென தாங்கள் தயாராக வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 நபர்களும் அவர்களுடன் சேர்ந்து பங்க் பாபுவை வெட்டினர்.
வெட்டி கொலை
இதில் அவருக்கு முகம் மற்றும் உடலில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர்களை தடுக்க முயன்ற பழனியின் முதுகிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. பட்டப்பகலில் எப்போதும் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதுபோல மர்ம நபர்கள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏராளமான மக்கள் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
மேலும் தகவலறிந்து அங்கு வந்த பங்க் பாபுவின் உறவினர்கள், அவரது உடலை கண்டு கதறி அழுதனர். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
பழிக்கு பழியாக...
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 4 பேருக்கும் 20-ல் இருந்து 25 வயது இருக்கும். திருவண்ணாமலை கார்கானா தெருவை சேர்ந்த முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளர் கனகராஜ் என்பவருக்கும், பங்க் பாபுவிற்கும் இடையே தொழில் ரீதியாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் கடந்த 2017-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் பங்க் பாபு உள்பட 3 பேர் சேர்ந்து கனகராஜை அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் வைத்து வெட்டி கொலை செய்தனர். இதில் கைது செய்யப்பட்டு பங்க் குமார் ஜாமீனில் வந்திருந்தார்.
எனவே கனகராஜ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக பங்க் பாபுவை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறினர். மேலும் பழிக்கு பழியாகத்தான் இந்த கொலை நடந்ததா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பங்க பாபுவுக்கு ஆனந்தி (40) என்ற மனைவியும், ராதாகிருஷ்ணன் (22) என்ற மகனும், உமாமகேஸ்வரி (17) என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story