வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை வினியோகம் தொடக்கம்


ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை வினியோகம்
x
ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை வினியோகம்
தினத்தந்தி 4 Dec 2020 10:30 AM IST (Updated: 4 Dec 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை வினியோகம் தொடங்கியது.

கொண்டைக்கடலை
கொரோனா காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும், முன்னுரிமை கார்டுதாரர்களுக்கும் மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 5 மாதங்களுக்கு வழங்க வேண்டிய 5 கிலோ கொண்டைக்கடலை டிசம்பர் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான சுமார் 3 ஆயிரம் டன் கொண்டைக்கடலை கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசு அறிவித்ததன் பேரில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 698 ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை பொதுமக்களுக்கு நேற்று வினியோகம் செய்யப்பட்டது. வேலூர் தாலுகாவில் வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னுரிமை கார்டுதாரர்கள்
6 தாலுகாக்களில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் முன்னுரிமை கார்டுதாரர்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 516 பேருக்கு தலா 5 கிலோ கொண்டடைக்கடலை வழங்கப்பட்டது. இவர்களுக்கு இந்த மாதம் துவரம் பருப்பு கிடையாது. இதேபோல முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்கள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 168 பேருக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டது. கொண்டைக்கடலை வழங்கப்படவில்லை.

பொதுமக்கள் கூறுகையில், அரிசி கார்டு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரி கொண்டைக்கடலை மற்றும் துவரம் பருப்பு வழங்க வேண்டும். இதில் மாற்றம் செய்யக்கூடாது என்றனர்.

Next Story