கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூரில் கனிமொழி எம்.பி. பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்


கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூரில் கனிமொழி எம்.பி. பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்
x
தினத்தந்தி 4 Dec 2020 11:56 AM IST (Updated: 4 Dec 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் பகுதிகளில் கனிமொழி எம்.பி. பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார். மழையை பொருட்படுத்தாமல் சென்ற அவருக்கு வியாபாரிகள் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு,

தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளில் பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார். இதுபோல் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் அந்தியூர், பவானி சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே பரப்புரை பயணம் செய்த அவர் மீண்டும் கோபி, பவானிசாகர் தொகுதிகளில் நேற்று பயணத்தை தொடங்கினார்.

கோபியில் நேற்று பயணத்தை தொடங்கிய கனிமொழி எம்.பி. தி.மு.க. மூத்த தலைவரும், கோபி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மறைந்த ஜி.பி.வெங்கிடு இல்லத்துக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டார்.

ஆளுயர மாலை

அரசூரில் அவருக்கு சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடி இருந்த பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து அரசூரில் இருந்து பவானி ஆறு வரை ரூ.20 லட்சம் செலவில் போடப்பட்ட தார் ரோட்டை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ரோட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் அரியப்பம்பாளையம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், அரசூர் கிளைச்செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

பின்னர் அவர் சத்தியமங்கலம் சென்றார். அங்கு சத்தியமங்கலம் நகர தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அந்த பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது. அதை பொருட்படுத்தாமல், திறந்த வேனில் நின்று கொண்டு கூடி இருந்த பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் சத்திமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு சென்றார். அவர் வேனில் இருந்து இறங்கி மழையிலும் நடந்து மார்க்கெட்டுக்குள் சென்றார்.

அங்கு பூ மார்க்கெட் தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆளுயர ரோஜா மாலையை கனிமொழி எம்.பி.க்கு அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அங்கு பூ கடைவைத்து இருக்கும் ஒருவர் ரோஜா பூங்கொத்தினை பரிசாக வழங்கினார்.

கோரிக்கை

சந்தையில் அனைத்து பகுதியையும் பார்வையிட்டு, விவரங்கள் கேட்டு அறிந்தார்.

அப்போது சந்தை நிர்வாகிகள் கூறும்போது, சத்தியமங்கலத்தில் வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் ஆலையை அரசு நிறுவவேண்டும். விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைளை கூர்ந்து கவனித்த கனிமொழி எம்.பி. பதில் அளிக்கும்போது, சில மாதங்கள் மட்டும் பொறுத்திருங்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், கோணமலை ஊராட்சி தலைவர் குமரேசன், அரியப்பம்பாளையம் பேரூர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், தொழிற்சங்கத் தலைவர் ஜோசப், ஈரோடு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கே.நாசிர் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மழை

சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட கனிமொழி எம்.பி. தாளவாடி சென்றார். திம்பம் மலைப்பாதையில் மழை கொட்டிய போதும் அவர் சென்ற வாகனம் கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் சென்றது. அங்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவண்ணா தலைமையில் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள கோடம்பள்ளி தொட்டி என்ற மலைக்கிராமத்துக்கு சென்ற கனிமொழி எம்.பி, பழங்குடியின மக்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கோரிக்கைகளை கேட்ட அவர், தாளவாடி சென்றார். அங்கு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அவர் கூறும்போது, தாளவாடி மலைப்பகுதி முழுவதும் விவசாயிகளை அதிகம் கொண்ட பகுதியாகும். விவசாயிகளின் மீது அதிக அக்கறை கொண்ட தலைவராக இருந்த கருணாநிதி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. விவசாயிகளுக்காக எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள் என்றார்.

குழந்தையை கொஞ்சினார்

அங்கு மழைத்தூறல் விழுந்து கொண்டு இருந்தாலும் திறந்த வேனில் நின்று கொண்டு பொதுமக்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது ஒரு பெண் குழந்தையை தூக்கி கொஞ்சினார். தாளவாடியில் பரப்புரை பயணத்தை முடித்த அவர், மீண்டும் கோபி வந்து பொதுமக்களை சந்தித்தார். பின்னர் அவர் கொங்கர்பாளையம் பகுதிக்கு சென்றார். அங்கு ஆதிதிராவிடருக்கான அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பு சீட் பெற்ற மாணவியை சந்தித்து பேசினார். பின்னர் தூக்கநாயக்கன்பாளையம் சென்ற அவர் அங்கு அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்களிடமும் சில நேரம் கலந்துரையாடினார். அங்கிருந்து நம்பியூர் சென்ற கனிமொழி எம்.பி.க்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் ஈரோடு மாவட்டத்தில் கனிமொழி எம்.பி.யின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பரப்புரை பயணம் நிறைவடைந்தது.

Next Story